ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்க 3-வது நாளாக தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
Published on

பென்னாகரம்,

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து

காவிரி மேலாண்மை வாரியம் கடந்த 15-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கபினி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீரும் என மொத்தமாக 12 ஆயிரத்து 298 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரைபுரண்டு ஓடிய காவிரி

இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 12 ஆயிரத்து 500 கன அடியானது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கண்காணிப்பு பணி

மேலும், ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, சினிப்பால்ஸ், உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்புபடையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3-வது நாளாக தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் (செவ்வாய் கிழமை) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஆக.18) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com