

மேட்டூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு தற்போது 6,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5,600 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 5,400 கன அடியாக சரிந்தது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அதன்படி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 5,000 கன அடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை தொடர்ந்து 22-வது நாளாக 120 அடியாக நீடிப்பதால் கடல் போல் காட்சி அளிக்கிறது.