

சென்னை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி சென்னை மின் ஆளுமை முகமை அலுவலகத்தில், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்களுடன், ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3-ந்தேதி வரை தொடர்ந்து கடைபிடிப்பது தொடர்பாக, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3-ந்தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.
நோய் தொற்று தன்மையை மீண்டும் ஆராய்ந்து நோய் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவு எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. ஆகவே, தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள் நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு மே 3-ந்தேதி வரையிலான ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும்.
தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர்கள் முன்புபோல் வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையினை மே மாதம் 3-ந் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நோயின் அறிகுறி இல்லாமல் தற்போது 80 சதவீதம் பேருக்கு இந்த தொற்று ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆகவே, மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர் தான் தற்போது பெரிதாக மதிக்கப்படுகிறது. தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவினை நாம் பின்பு மீட்டெடுத்து விட முடியும். ஆகவே, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த மே மாதம் 3-ந் தேதி வரையிலான ஊரடங்கினை தொடர்ந்து கடைபிடிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.