

தஞ்சாவூர்,
பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. அனைவரையும் வாழ வைக்கும் அந்த காவிரி தாய்க்கு நன்றிசெலுத்தும் விதமாகவே ஆடி பதினெட்டாம் விழா கொண்டாடப்படுகிறது.
முக்கியமாக தமிழகத்தில் காவிரி ஆறு ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காவிரியில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியும் கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.
தஞ்சை மாவட்டத்தில் காவிரியில் நீராடவும், வழிபாடு செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதனால் பொதுமக்கள் யாரும் ஆடிப்பெருக்கு கொண்டாட காவிரி கரைக்கு வரவில்லை. இதன்காரணமாக காவிரி படித்துறைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. என்றாலும் தடையை மீறி சில இடங்களில் மக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் சாமி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மேட்டூர் பூங்காவிற்கு உள்ளே செல்லவும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடும் படித்துறை அமைந்துள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் தடுப்பு வேலி அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு கண்காணித்தனர்.
இதன் காரணமாக முனியப்பன் கோவில், ஆற்றங்கரை, பூங்கா போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா ஊரடங்கால் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை களையிழந்தது. இதனால் பக்தர்கள் நடமாட்டமின்றி காவிரி கரையோரமும் வெறிச்சொடி காணப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்கு விழாவின்போது மக்கள் பெருமளவு கூடி புனித நீராடி வழிபாடு நடத்துவார்கள். இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்கு அனுமதியில்லாததால் காவிரி கரையோர பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அம்மாமண்டபம் சாலையில் ஆங்காங்கே போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர்.
ஆடிப்பெருக்கை கொண்டாட குடும்பத்துடன் வந்தவர்கள், மாலைகளுடன் வந்த புதுமணத்தம்பதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். படித்துறைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் போலீஸ் பாதுகாப்பு போடப்படாத காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளுக்கு சென்று அங்கு படையலிட்டு வழிபாடு நடத்தினார்கள். சிலர் காவிரி கரையோரங்களில் நின்றபடி செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுபோல் ஜீயபுரம் அருகே உள்ள முக்கொம்பு சுற்றுலா மையத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடுவது வழக்கம். தற்போது சுற்றுலாமையம் மூடப்பட்டு உள்ளதால் முக்கொம்பு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள், புதுமண தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் மாலைகளை ஆற்றில் விட்டதோடு, புதிய தாலி கயிறும் அணிந்தனர்.