

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48), கூலி தொழிலாளி. கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தங்கமணி 27-ந் தேதி திடீரென உயிரிழந்தார். சிறையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கமணியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸ் தாக்கியிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
மேலும் தங்கமணியின் வழக்கில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும் திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
விலா எலும்பு முறிவு
இதற்கிடையே தங்கமணியின் உடலை கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் 2 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கமணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், உயிரிழந்த தங்கமணியின் வலது கையில் 2 இடங்களிலும், இடது கையில் ஒரு இடத்திலும் சிராய்ப்பு காயங்கள் உள்ளன. அந்த காயங்கள் இறப்பதற்கு 12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும் இடது கையின் பின்புறத்தில் சுண்டு விரலுக்கு அருகே உள்ள எலும்பில் ஆழமான ரத்தக்கட்டு உள்ளது. இந்த காயம் இறப்பதற்கு 6 மணி நேரத்துக்குள் ஏற்பட்டுள்ளது. நாக்கு நடுப்பகுதியில் காயம் உள்ளது. இதேபோல் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது. 3-வது மற்றும் 4-வது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு ரத்தக்கட்டு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.