

பெங்களூரு,
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சமர்தக் போர்க்கப்பல் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கடற்படைக்காக போர்க்கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த போர்க்கப்பலுக்கு 'ஐ.என்.எஸ். சமர்தக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 'ஐ.என்.எஸ். சமர்தக்' போர்க்கப்பலை இந்திய கடற்படைக்கு அர்ப்பணித்தார். பின்னர் நடந்த விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
மத்திய அரசின் 'உள்நாட்டிலேயே தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா காட்டுப்பள்ளி கடற்பகுதியில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் வைத்து எல் அன்ட் டி (லார்சன் அன்ட் டர்போ) நிறுவனத்தினரால் இந்த ஐ.என்.எஸ். போர்க்கப்பல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படையில் சேர்க்கப்பட இருக்கும் அதிநவீன 4 போர் கப்பல்களில், ஐ.என்.எஸ். சமர்தக் கப்பல் தான் முதலாவது ஆகும்.
கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். சமர்தக் போர்க்கப்பல் எதிரிகளை கண்டறிந்து அவர்களை தாக்கும் வல்லமை படைத்தது. 100 மீட்டருக்கும் அதிகமான நீளமும், சுமார் 5 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், 7,200 நாட்டிக்கல் கடல் மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த போர்க்கப்பல் மூலம் இந்தியக் கடற்படையின் செயல்பாட்டு திறன்கள் மேம்படும். எந்த நேரத்திலும், எந்தவொரு பணியையும் செய்யத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் முதலில் பதிலடி கொடுக்கும் திறனும் கொண்டது. இவ்வாறு அவர் கூறினார்.