ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் அதிநவீன 2 ஹெலிகாப்டர்கள் இணைப்பு

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் அதிநவீன இலகுரக 2 ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன, இதற்கான நிகழ்ச்சியில் கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி பிசுவாஜித் தாஸ் குப்தா பங்கேற்றார்.
ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் அதிநவீன 2 ஹெலிகாப்டர்கள் இணைப்பு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தட்டான்வலசையில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது.

இந்த தளத்தில் ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களும், ஆளில்லாத விமானம் ஒன்றும் உள்ளன. இவை, ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உச்சிப்புளி கடற்படை விமான தளத்துக்கு புதிதாக ஏ.எல்.எச்.எம்கே.3 என்ற வகையை சேர்ந்த 2 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. அவற்றை பாதுகாப்பு பணிக்காக அர்ப்பணிக்கும் மற்றும் விமான தளத்தில் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு

இதையொட்டி விமான தளத்திற்கு அந்த 2 ஹெலிகாப்டர்களையும் கொண்டு வந்த போது, கடற்படையின் தீயணைப்பு வாகனங்கள் இருபுறமும் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களும் அருகருகே நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தளபதி பிசுவாஜித் தாஸ் குப்தா, உச்சிப்புளி தளத்துக்கான அதிநவீன 2 ஹெலிகாப்டர்களின் சேவையை தொடங்கிவைத்தார்.

விழாவில் அவர் பேசுகையில், கிழக்குப் பிராந்திய பகுதி மட்டுமல்லாமல் தென் இந்தியாவில் உள்ள கடற்படை விமான தளங்களில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் மிகப்பெரிய விமான தளங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ளதைவிட இன்னும் 10 ஆண்டுகளில் 5 மடங்கு அளவுக்கு இந்த விமான தளத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, விமான ஓடுபாதைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com