அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு
Published on

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீட்டுமனை பட்டாக்கள்

தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரூர் அம்பேத்கார் நகர் பகுதியில் ஆதிதிராவிடர் இன மக்களுக்காக வழங்கப்பட்ட 350 பயனாளிகளுக்கான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் குறித்து ஆய்வு செய்த அவர் தற்போழுது இணையவழி பட்டாக்களாக வழங்குவது குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அம்பேத்கர் காலனியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்த கலெக்டர் சாந்தி, ரேஷன் பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

இதனைதொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா எருமியாம்பட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்காக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பட்டுக்கோணம்பட்டி கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவிகள் கல்லூரி விடுதி அமையவுள்ள உள்ள இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

சத்துணவு கூடம்

தொடர்ந்து பட்டுக்கோணம்பட்டி ஊராட்சி சாமியாபுரம் பிற்படுத்தப்பட்டோர் நல நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை கலெக்டர் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாகவும், சுவையானதாகவும் சமைத்து வழங்க வேண்டுமென்று சத்துணவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அந்தப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் கலெக்டர் சாந்தி அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது அரூர் தாசில்தார் பெருமாள், அரூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்பிரமணி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com