தங்க நகை பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தங்க நகை பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தங்க நகை பட்டறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Published on

கோவை,

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதன்படி தனது முதல் கள ஆய்வினை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதல்-அமைச்சருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் இக்கட்டிடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இந்த நிலையில், கோவை தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழுமத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா முதல்-அமைச்சரிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கையுடன் இருங்கள், அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கோவை சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது விடுதி கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com