சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கல்வராயன்மலைப் பகுதி சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார்.
சோதனை சாவடியில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்குள்ள ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் சாராயம் காய்ச்சி சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி கல்வராயன்மலையில் சென்னை வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான போலீசார் முகாமிட்டு தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன்மலையில் இருந்து சாராயத்தை காய்ச்சி மலைஅடிவாரம் பகுதி வழியாக வெளியூர்களுக்கு கடத்தி செல்வதை தடுக்கும் வகையில் மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி, மாயம்பாடி, துருர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் சென்னை வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு மேற்கொண்டார்.

நடவடிக்கை

அப்போது அவர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், சாராயத்துக்கு தேவையான மூலப்பொருட்களை மலைக்கு கடத்தி செல்வதை தடுக்க அனைத்து வாகனங்களையும் சரியாக சோதனை செய்ய வேண்டும். மேலும் மலையில் இருந்து யாரேனும் சாராயத்தை காய்ச்சி வாகனங்களில் கடத்திக் கொண்டு வருகிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பணியில் அலட்சியமாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் சேராப்பட்டு -சங்கராபுரம் செல்லும் சாலை, வெள்ளிமலை கச்சிராயப்பாளையம் செல்லும் சாலையில் வடக்கு மண்டல மதுவிலக்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் சாராயம் காய்ச்சி கடத்தி செல்லப்படுகிறதா என சோதனை நடத்தினர். இந்த ஆய்வின் போது மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com