

சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகளில், மயான பூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் விளக்குகளும் உயர் கோபுர மின் விளக்குகளும் சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,11,285 மின் விளக்குகள் அனைத்தும் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திடும் வகையில், அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், உத்தரவிடப்பட்டது. கள ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் இணை ஆணையாளர் (பணிகள்) அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள மின்விளக்குகளில் எரியாத மின் விளக்குகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.
மேலும், மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி, வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (கல்வி), மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் துணை ஆணையாளர் (சுகாதாரம்), தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (பணிகள்) ஆகியோர் வட்டார பொறுப்பு அலுவலர்களும், 1 முதல் 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களாக உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நேற்று 14.11.2026 இரவு முழுவதும் 100 சதவீதம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கள ஆய்வில் மொத்தமுள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளில் 1,610 தெரு மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில், மழைநீர் வடிகால் பணி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பணி, சென்னை மாநகராட்சி குடிநீர் மற்றும் கழிவு வாரிய பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் 579 தெரு மின் விளக்குகளும், புதை மின்வட பழுதினால் 182 தெரு மின் விளக்குகளும், 849 எண்ணிக்கையிலான எல்இடி (LED) மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. 849 எண்ணிக்கையிலான எரியாத மின் விளக்குகளை 24 மணி நேரத்திற்குள்ளும் 182 எண்ணிக்கையிலான புதை மின்வட பழுதுகளை 48 மணி நேரத்திற்குள் சரி செய்து எரிய வைக்கப்படும்.
மேலும், மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி, மரக்கிளைகளால் விளக்குகளின் வெளிச்சம் பாதிக்கப்படும் இடங்கள் கண்டறிந்து மரக்கிளைகள் வாரந்தோறும் அகற்றி தெரு மின் விளக்குகள் நன்கு ஒளிர்வதை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தெரு விளக்குகள் பழுது பார்க்கும் சமயத்திலும் மற்ற நேரத்திலும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர்வதை தொடர்ந்து கண்காணித்து அனைத்து மின் விளக்குகளும் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒளிராத மின் விளக்குகள் மற்றும் இதர பழுதுகள் தொடர்பாக மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், 'நம்ம சென்னை' செயலி (App) மூலமும் தகவல் அளிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.