ரெயிலில் மூதாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது

திருடிய நகைகளை கோவையில் விற்பனை செய்வதற்காக பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரெயிலில் மூதாட்டியிடம் 50 பவுன் நகை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் கைது
இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன்
Published on: 

கோவை,

ரெயிலில் பயணம் செய்த மூதாட்டியிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், திண்டுக்கல்லை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்காக எடுத்து சென்ற நகைகள்

கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், கடந்த 2-ம் தேதி சென்னையில் உள்ள தனது மகனின் வீட்டிலிருந்து சொந்த ஊருக்கு ரெயிலில் புறப்பட்டார். வீட்டில் நடைபெறவிருந்த திருமண விசேஷத்திற்காக, தனது பையில் 50 பவுன் தங்க நகைகளை அவர் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

தூங்கிய நேரத்தில் கைவரிசை

ரெயில் திருச்சூரை கடந்து சென்று கொண்டிருந்தபோது, மூதாட்டி அயர்ந்து தூங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், மூதாட்டியின் பையில் இருந்த 50 பவுன் நகைகளை திருடிக்கொண்டு பாலக்காடு ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பியோடினார். கண்விழித்த மூதாட்டி நகைகள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

சிசிடிவியில் சிக்கிய இன்ஸ்டா பிரபலம்

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ரெயில்வே போலீசார், ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவத்தை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான பாலமுருகன் என்பதை கண்டறிந்தனர்.

கோவையில் கைது

இதனிடையே, திருடிய நகைகளை கோவையில் விற்பனை செய்வதற்காக பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோவை விரைந்த தனிப்படை போலீசார், பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X