இன்ஸ்டா பிரபலம் மதுமிதா மீதான நகை திருட்டு புகார்; காண்டிராக்டருக்கு நெல்லை போலீஸ் மீண்டும் சம்மன்

பேச்சிமுத்து விசாரணைக்கு ஆஜராகததால் போலீசார் அவருக்கு 2-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா மீதான நகை திருட்டு புகார்; காண்டிராக்டருக்கு நெல்லை போலீஸ் மீண்டும் சம்மன்
Published on: 

நெல்லை,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் அனந்தநாடார்குடி பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா (வயது 28). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் அடிக்கடி ஏராளமான நகைகளை அணிந்தவாறும், பணக்கட்டுகளை கைகளில் வைத்தவாறும் 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இவரது வீட்டில் கடந்த மாதம் சுமார் 118 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 98 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து (35) என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு மதுமிதா தன்னிடம் இருந்து 5 பவுன் நகையை பறித்துச் சென்றதாக ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம், பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதி என்பதால், இந்த வழக்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதுபற்றி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் விசாரணை நடத்தினார். அப்போது, முதுகுவலி பிரச்சினைக்காக பிசியோதெரபி சிகிச்சைக்குச் சென்றபோது மதுமிதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், கடந்த 2022-ம் ஆண்டு நெல்லைக்கு வந்திருந்தபோது உத்தமபாண்டியன்குளம் விலக்கு பகுதியில் காரில் இருந்தபடி தனக்கு மசாஜ் செய்த மதுமிதா, தனது நகையை பறித்துச் சென்றதாகவும் பேச்சிமுத்து கூறினார்.

இதன் அடிப்படையில் போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்தனர். முதலில் பேச்சிமுத்துவை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

அவருக்கு போலீசார் 2-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர். பேச்சிமுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மதுமிதாவுக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால், காண்டிராக்டரிடம் யூடியூபர் மதுமிதா 5 பவுன் நகை பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com