

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் வாள், அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட வழக்கில், போலீசார் மேலும் 2 பேரைக் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சிவகங்கை அருகே ஒக்கூர் மேலமங்கலம் பகுதியில் கடந்த மாதம் 18-ம் தேதி, 'சுள்ளான்' மதன் என்ற ரவுடி பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையைத் தொடர்ந்து, சிவகங்கையில் உள்ள எதிரெதிர் ரவுடி கும்பல்களும் அவர்களது ஆதரவாளர்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் ஆயுதங்களைக் காட்டி, அடுத்தடுத்து பழிவாங்குவோம் என வன்முறை வசனங்களுடன் ரீல்ஸ் வீடியோக்களை சவாலாக பதிவிட்டு வந்தனர்.
இளைஞர்களின் இந்த ரீல்ஸ் மோகம் பொது அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. காவல்துறையின் சமூக வலைதளக் கண்காணிப்புப் பிரிவு தீவிர சோதனையில் ஈடுபட்டது. அந்த தேடுதல் வேட்டையின் பலனாக, வன்முறையைத் தூண்டியதாக இதுவரை 34 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே 7 பேர் பிடிபட்ட நிலையில், வாள் மற்றும் கத்திகளுடன் வீடியோ வெளியிட்ட ரிஷி ராஜா (வயது 19) மற்றும் கவி சரண் (வயது 18) ஆகிய 2 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதில் தொடர்புடைய 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் ஆடைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, வன்முறையைப் பரப்பும் விதமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்பட்ட 210 சமூக வலைதளக் கணக்குகளை காவல்துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
"சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக ஆயுதங்களை ஏந்தி வன்முறையைத் தூண்டினால், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கடுமையான ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும்," என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா எச்சரித்துள்ளார்.