இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை வழக்கு: கைதான யூடியூபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

தற்கொலைக்கு தூண்டியதாக ஜேசன் சாமுவேல் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை வழக்கு: கைதான யூடியூபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
Published on: 

ஆலந்தூர்,

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் கைதான யூடியூபர் ஜேசன் சாமுவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் தற்கொலை

சென்னையை அடுத்த கானத்தூர் நாகாத்தம்மன் தெருவில் வசித்து வந்தவர் ஹரிஷ் (வயது 27). யூடியூபரான இவர். இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நிதி முதலீடு மற்றும் சேமிப்பு குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தார்.

இவருக்கும், மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கும் இடையே இணையவழியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹரிஷின் வீடியோக்களை விமர்சித்து அவர் வீடியோ வெளியிட்டதாகவும், இதையடுத்து சிலர் ஹரிஷின் வீடியோக்களை அவதூறாக விமர்சிக்க தொடங்கியதாகவும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த ஹரிஷ், கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரூ.3 கோடி கேட்டு மிரட்டல்

இதுதொடர்பாக ஹரிஷின் தந்தை விநாயகம், கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதி புதுச்சேரியை சேர்ந்த யூடியூபர் ஜேசன் சாமுவேல் (30) என்பவர். தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் ஹரிஷ் மீது ஆதாரமற்ற மோசடி குற்றச்சாட்டுகளை பதிவிட்டார்.

தனது சமூகவலைதள செல்வாக்கை பயன்படுத்தி ஹரிசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி, அவரை பொதுவெளியில் அவமானப்படுத்தி, இணையவழி துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு ஹரிஷ் வெளியிட்ட வீடியோ பதிவில், தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் சாமுவேல் என குறிப்பிட்டிருந்ததுடன், ஜேசன் சாமுவேல் தன்னிடம் ரூ.3 கோடி கேட்டதாகவும், பணம் தராவிட்டால் சமூக வலைதள கணக்குகளை முடக்கிவிடுவதாகவும். புதிதாக கணக்கு தொடங்கினாலும் அதையும் முடக்கிவிடுவதாகவும் மிரட்டியதாக கூறி இருந்தார்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

சமூகவலைதள பிரபலம் கைது

இதையடுத்து, கானத்தூர் போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவின் கீழ் மாற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பேரில் ஹரிஷ் குறித்து அவதூறு பரப்பி, அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஜேசன் சாமுவேல் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த அவரை கானத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நீதிமன்ற காவல்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் கைதான யூடியூபர் ஜேசன் சாமுவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

அவதூறு வீடியோ வெளியிட்டு ஹரிஷை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட ஜேசன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com