இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

இளம்பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் காதல் விவகாரம்: அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் உருவான காதல் விவகாரத்தில் அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்த 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆண்டுகள் காதல்

கயத்தார் தாலுகா தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்வத்தின் மகள் அபிசெல்வி (19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்ற இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில், அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் அவரது தாயார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த அபிசெல்வி, அப்போது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

அண்ணன் கண்டிப்பு

இந்நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறியும் அபிசெல்வி தொடர்ந்து அந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். நேற்று அவர் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை அவரது அண்ணன் சிவஞானம் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது சிவஞானம் தங்கையை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அபிசெல்வி, வீட்டில் இருந்த ரசாயனப் பொடியை தண்ணீரில் கலந்து குடித்ததுடன், பின்னர் தனது அறைக்குள் சென்று சீலிங் பேனில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தீவிர விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com