

நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும் என்று சேலத்தில் மத்திய இணை மந்திரி தர்ஷனாபென் ஜர்தோஷ் தெரிவித்தார்.
தொடக்க விழா
சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் தொடக்க விழா சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனாபென் ஜர்தோஷ் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.
இதில், குஜராத் மாநில கூட்டுறவு துறை மந்திரி ஜெகதீஷ் விஸ்வகர்மா, காந்தி நகர் மாவட்ட கலெக்டர் பிரவீனா மற்றும் சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் சுரேஷ்பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜவுளி பூங்காக்கள்
இதையடுத்து மத்திய இணை மந்திரி தர்ஷனாபென் ஜர்தோஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் இணைந்து சவுராஷ்டிரா தமிழர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 17 ஆயிரத்து 750 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர்.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குஜராத் அரசு நல்ல முயற்சியை தொடங்கி உள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் தமிழகம் மற்றும் குஜராத் இடையே மிகப்பெரிய ஒருங்கிணைப்பு உருவாகும். நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படுகிறது. முதலாவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா தொடங்கப்படுகிறது. இதில் 50 சதவீத நிதி மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும்.
பரிசீலித்து நடவடிக்கை
முற்றிலும் எந்தவித சுற்றுச்சூழல் பிரச்சினைக்கும் இடம் இல்லாத வகையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைய உள்ளன. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் ஜவுளி பூங்கா தொடங்கப்படுவது குறித்து இதுவரை எந்தவித முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை. முன்மொழிவு வந்த பிறகு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள், ஆன்மிக நகரங்களை இணைக்கும் வகையில் பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.