

சென்னை,
அண்ணாமலையை தொடர்ந்து தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த கரு.நாகராஜன், மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று விலகியுள்ளனர்.
அதன்பின்னர் கரு.நாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஒரு குடும்பத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. உருவானால் அடுத்த முறை வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நிரந்தரமாக ஒரு குடும்பத்தினர் மட்டும் எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார் அண்ணாமலை.
இந்த அமைப்பில் ஏழு லட்சத்துக்கும் மேலான மக்கள் தானாக முன்வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தமிழ்நாடு மக்களின், இளைஞர்களின், பெண்களின், தாய்மார்களின் ஆதரவு பெற்ற அண்ணாமலைக்கு நாங்களும் அணில் போன்று உதவி செய்ய பாஜகவிலிருந்து விலகி அவருடைய இயக்கத்தில் இணைந்திருக்கிறோம்.
தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கின்ற அறிவுசார்ந்த தலைமை அண்ணாமலையிடம்தான் இருக்கிறது. ஆற்றமிக்கத் தலைவராக குக்கிராமங்கள் வரை பாஜகவைக் கொண்டு சென்றவர் அண்ணாமலை. டெல்லியிலிருந்து வரும் தலைவர்கள் இங்கு பேசுவதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.
சமூக வலைத்தளங்களில் அண்ணாமலைக்கு அதிகளவிலான பின்தொடர்வோர்கள் இருக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் துணிச்சலாகப் பேசக்கூடியவர் அண்ணாமலை. அவரைப் போன்றவர்களைத்தான் தமிழ்நாடு மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.