2-ம் போக நெல் சாகுபடி தீவிரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த வைகை தண்ணீரை பயன்படுத்தி தற்போது 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
2-ம் போக நெல் சாகுபடி தீவிரம்
Published on

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த வைகை தண்ணீரை பயன்படுத்தி தற்போது 2-ம் போக நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நெல் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியதோடு இயல்வான மழை அளவினை விட குறைவாகவே பெய்தது. பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில்தான் பெய்தது. இதனால் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் மழையில்லாமல் போனதால் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் பல பகுதிகளில் பயிர்கள் கருகி விட்டன.

நெல் மணிகள் வளரும் முன்பே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. நெல் கைவிட்டதால் அதனை நம்பி பயனில்லை என்று பல பகுதிகளில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுத்துவிட்டு மீண்டும் உழுது பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை உள்ளது. ஆனால், வைகை தண்ணீர்பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் எடுத்து நீர்நிலைகளை நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும், மழை ஓரளவு பெய்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்துள்ளது.

2-ம் போக சாகுபடி

வைகை அணையில் இருந்து வந்த தண்ணீரை மாவட்ட நிர்வாகம் முறையாக அனைத்து கண்மாய்களுக்கும் பாரபட்சமின்றி பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக வைகை தண்ணீர் பல ஆண்டுகளாக பாயாத பகுதிகளில் கூட கொண்டு சேர்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் வைகை தண்ணீர் நிறைந்து முதல்போக சாகுபடி முழுமையடைந்தது.

இந்நிலையில் முதல்போக அறுவடை முடிந்த பின்னர் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழுது மீண்டும் விதைத்து 2-ம் போக சாகுபடியை தொடங்கி உள்ளனர். தங்கள் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் இன்னும் இருப்பு உள்ளதாலும் 2-ம் போக சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும் என்பதாலும் நம்பிக்கையுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாயை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் திருஉத்தரகோசமங்கை செல்லும் பகுதிகளில் நெற்பயிர்கள் வளரத்தொடங்கி உள்ளன. முதல்போக சாகுபடியே பெரும்பாலும் கருகி வறட்சியான நிலையில் வைகை தண்ணீர் சென்று சேர்ந்த பகுதிகளில் 2-ம் போக சாகுபடி செய்து பயிர்கள் வளர்ந்து பச்சை கம்பளம் விரித்ததுபோன்று காட்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com