

சென்னை,
கொரோனா தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில் ஜே.இ.இ. முதன்மை தேர்வு, நீட் தேர்வை நடத்துவதா? என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இருப்பினும், தேர்வை நடத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. அதன்படி, ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி முடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை தற்போது தயாராகி வருகிறது. ஜே.இ.இ. முதன்மை தேர்வு கணினி மூலம் நடத்தப்பட்டது. ஆனால் நீட் தேர்வு அப்படி இல்லை. அது பேனா மற்றும் பேப்பர் மூலமாக நடத்தப்பட இருக்கிறது.