

சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் குளிரூட்டப்பட்ட மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு நிலையத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் ப.சம்பத் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கும், அதை பாதுகாப்புடன் வைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாநில தடுப்பு மருந்து சேமிப்பு கிடங்குகளில் 1.17 கோடி தடுப்பு மருந்துகளை சேமிக்க முடியும். தமிழகம் முழுவதும் 51 சேமிப்பு கிடங்குகள் கடந்த ஜூன் மாதத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பறவை காய்ச்சல் உள்ளது. எனவே கால்நடைத்துறை சார்பில் கேரளாவை சுற்றியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 26 தற்காலிக சோதனை சாவடியில் முழு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்த சோதனை சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும். முதற்கட்டமாக அரசு, தனியார் மற்றும் பாதுகாப்புதுறையில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக ஊசி உள்ளது. மேலும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். தற்போது 17 லட்சம் தடுப்பு மருந்து செலுத்தும் ஊசிகள் தயாராக உள்ளது. சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து முதற்கட்ட பணியாளர்களுக்கு செலுத்தப்படும். இதில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்களை சேர்க்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.