

சென்னை,
சென்னையில் 1,051 பள்ளி வளாகங்களில் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், அறிவுறுத்தலின்படி, துணை ஆணையர்(சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றும் பணிகள் (Source Reduction) இன்று மேற்கொள்ளப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, பள்ளி வளாகங்களில் பயன்படுத்தப்படாத பொருட்களில் மழைநீர் தேங்கி, அதன் மூலம் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் (Aedes) வகைக் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்புள்ளது.
ஏடிஸ் வகைக் கொசுக்கள் பகல் நேரங்களில் மனிதர்களைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்பதால், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று (06.11.2026) பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் உள்ள பள்ளிகளில், 1,051 அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்கள் மொத்தம் 2,147 கிலோ அகற்றப்பட்டுள்ளன. மேலும், பள்ளி வளாகங்களில் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் 1,676 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 221 கொசுப் புகைப் பரப்பும் இயந்திரங்கள், 132 கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.