

சென்னை,
சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சென்னை கோட்டை முன்பு போலீசார் தீவிர அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம், சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்ற இருக்கிறார்.
முன்னதாக, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது நடைபெறும் போலீஸ் அணிவகுப்பில் சிங்கப்பெண் அதிரடிப்படையும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோட்டை முன்பு சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று காலை 3-வது அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், பங்கேற்ற போலீசார், சுதந்திர நாளில் அணியும் ஆடையுடன் மிடுக்குடன் நடந்து வந்தனர்.
சுதந்திர தின விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரிலான விருதையும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்க இருக்கிறார்.
மேலும், இந்த விழாவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு டாக்டர் அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்-அமைச்சர் விருதுகள், முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி கவுரவிக்கிறார்.