அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு கார் வழங்க இடைக்கால தடை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக அறிவிக்கப்பட்ட காரை கண்ணனுக்கு வழங்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு கார் வழங்க இடைக்கால தடை
Published on

மதுரை,

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்று மாடுகளை அடக்கினர். இந்த போட்டியை நேரில் காண முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெறுபவருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் 33 ஆம் எண் கொண்ட ஹரிகிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் 2 மாடுகளை பிடித்த நிலையில், கையில் ஏற்பட்ட காயத்தால் களத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் அவரது 33 ஆம் எண் கொண்ட டீ-சர்ட்டை, விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வாங்கி அணிந்து கொண்டு 10 மாடுகளை பிடித்துள்ளார். இதனால் அன்றைய ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் மொத்தம் 12 மாடுகளை அடக்கியதாக விராட்டிபத்து கண்ணனுக்கு கார் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் 11 மாடுகளை பிடித்த கருப்பணன் என்பவருக்கு 2 வது பரிசு அறிவிக்கப்பட்டது. இதனை வாங்க மறுத்த கருப்பணன் ஆள் மாறாட்டம் நடைபெற்றது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, ஆள்மாறாட்டம் செய்து மாடுகளை பிடித்தது உறுதி செய்யப்பட்டதால் விராட்டிபத்து கண்ணனுக்கு கார் பரிசு வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார், அந்த விழாவில் முதல் பரிசு பெற்ற கண்ணனுக்கு கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பரிசை வழங்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com