மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - ஐகோர்ட்டு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், இடைக்கால உத்தரவு எதுவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக கூறியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அரசு பள்ளி மாணவர்களை போல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கமும் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்கு திருப்பி அளிக்கப்பட்டது. அந்த இடங்களிலும், 7.5 சதவீத இடஒதுக்கீட்டு வழங்கப்பட்டு, அவற்றுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய 2 வார அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், பொதுநலனை கருத்தில் கொண்டு, மாணவர் சேர்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், இடைக்கால உத்தரவு எதையும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினர். பின்னர், விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com