அண்ணாமலையார் கோவிலில் கட்டுமானம் மேற்கொள்ள இடைக்கால தடை - ஐகோர்ட்டு உத்தரவு

பக்தர்களின் வசதிக்காக ‘கியூ காம்பிளக்ஸ்’ கட்டப்பட உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் கோபுரம் முன்பு 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அனுமதி அளித்து 2023-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ராஜகோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவது கோவிலின் விழாக்களுக்கு இடையூறாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிபதி எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, வணிக வளாகம் கட்டுவதற்கு பதிலாக பக்தர்களின் வசதிக்காக ‘கியூ காம்பிளக்ஸ்’ கட்டப்பட உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘கியூ காம்பிளக்ஸ்’ அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தொழில்நுட்ப அறிக்கையை தாக்கல் செய்ய அறநிலையத்துறை சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள சூழலில், நான்காம் பிரகாரத்தில் ‘கியூ காம்பிளக்ஸ்’ மற்றும் பக்தர்கள் காத்திருப்புக் கூடம் கட்டப்பட்டு வருவதாக கூறி புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனை பார்வையிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வராமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் அறநிலையத்துறையின் செயல் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காம் பிரகாரத்தில் சுற்றுச்சுவருக்கு மிக அருகில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்பதை ஆவண ஆதாரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும், அதுவரை நான்காம் பிரகாரத்தில் ‘கியூ காம்பிளக்ஸ்’ மற்றும் பக்தர்கள் காத்திருப்புக் கூடம் மட்டுமல்லாமல், கோவிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், வரும் அக்டோபர் 5-ந்தேதி கோவிலை நேரில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.






