தென்காசி கலெக்டர் அலுவலகம் கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தென்காசி கலெக்டர் அலுவலகம் கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படுகிறது. ரூ.119 கோடி செலவில் 6 மாடிகளுடன் கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியை நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமானப் பணிக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் அரசு கட்டிடங்களை கட்டுவது விதிமீறலாகும். இதனால் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி மேற்கொள்ளும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நெல்லையைச் சேர்ந்த எஸ்.பி.முத்துராமன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியேர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. உரிய வரைபட அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

அதையடுத்து அரசு வழக்கறிஞர் கூறுகையில், சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பித்து உள்ளோம். ஆட்சியர் அலுவலகம் கட்டுவது பொதுநலன் சார்ந்தது. இதனால் கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கூடாது என்றார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் உள்ளிட்ட எந்த கட்டுமானப் பணிகள் மேற்கொண்டாலும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறாததால் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. 4 வாரங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று கட்டுமானப் பணியை தொடரலாம்" என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com