

சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு பாமாயில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 600 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை டெண்டர் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ம் தேதி வெளியிட்டது.
இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த மாதம் 8-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டு, 4 நிறுவனங்களுக்கு பாமாயில் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் டெண்டர் ஒதுக்கப்பட்டது. முதல் கட்டமாக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வருகிற 29-ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக குடோன்களுக்கு இந்த நிறுவனங்கள் விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது.
விநியோகம் செய்ய வேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவில்லை என்று கூறி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டெண்டர் எடுத்துள்ள கேடிவி ஹெல்த் புட் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், “200 லட்சம் பாக்கெட்டுகளை முதலில் விநியோகம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், 200 லட்சம் பாக்கெட்கள் விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எம்.ஜி.எம். நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளும், 210 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள குமார் ஆக்ரோ நிறுவனம் 52 லட்சம் பாக்கெட்டுகளும், 180 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய இன்டகரேட் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளும், 360 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டிய எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது விநியோகம் செய்ய வேண்டிய பாக்கெட்டுகள் அடிப்படையில் சரியான விகிதாசார அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 360 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள எங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் 150 லட்சம் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டி எம்ஜிஎம் ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனறு உத்தரவிட்டது சரியானதல்ல. எனவே, பாமாயில் விநியோகம் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விகிதாசார அடிப்படையில் பாமாயில் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய உத்தரவிடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சரவணன் ஆஜராகி வாதிட்டார். அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாமாயில் விநியோகம் தொடர்பாக கடந்த மாதம் 29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை 2-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.