

சென்னை:
முன்னதாக தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையம், 2016-ம் ஆண்டு செப்டம்பர் 26-ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது.
ஆனால் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்ததால், வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது. இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
வார்டு வரையறை தொடர்பான பணிகள் முடிவடையாததால் தேர்தல் தொடர்ந்து தாமதம் ஆகிவருகிறது. இதனால் தனி அலுவலர்களின் பதவிக்காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனி அலுவலர்களின் பதவிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. எனவே, அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். அதில், வார்டு வரையறை பணிகள் இன்னும் முடிவடையாததால், பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, சட்டத் திருத்தத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சபையில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்ததால், குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம் உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் 4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.