கிராமப்புற அரசு டாக்டர்களுக்கு உள் ஒதுக்கீடு: சட்டப்போராட்டத்தின் மூலம் உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி

கிராமப்புற அரசு டாக்டர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டத்தின் மூலம் உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கிராமப்புற அரசு டாக்டர்களுக்கு உள் ஒதுக்கீடு: சட்டப்போராட்டத்தின் மூலம் உரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி
Published on

சென்னை,

கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) சில விதிமுறைகளை வகுத்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முக்கிய தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பில், அரசால் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட நிறுவனமான இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறியது. இடஒதுக்கீட்டில் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தில் எம்.சி.ஐ. தலையிட முடியாத நிலையை இந்த உத்தரவு ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில், மாநிலத்திற்கான 50 சதவீத இடங்களில் உள் ஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்கும் நடைமுறை பல காலமாக தமிழ்நாட்டில் இருந்து வந்தது.

இந்த நடைமுறையை பாதிக்கும் விதத்தில், இந்திய மருத்துவக் குழுமம் (எம்.சி.ஐ.), முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்கு முறைகளை வெளியிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், தமிழ்நாடு அரசு இந்த வழக்கை ஆதரித்து மூத்த வக்கீல்களை நியமித்து, முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள உள் ஒதுக்கீட்டு முறையே தொடர வேண்டும் என்று ஆணித்தரமாக வாதாடியது.

இவ்வழக்கில், கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியன்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புரையில், மாநில அரசுகள் மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது, முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது அல்ல. எனவே அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசுகள், முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் மருத்துவ சேவையாற்றுகிற தமிழக அரசு, மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்பில் வழங்கப்பட்டு வந்த உள்ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டில் சட்டப்போராட்டம் மூலம், உரிமையை நிலைநிறுத்தியது தமிழக அரசுதான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com