சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
Published on

சென்னை,

இந்திய அரசு சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த விழாவில் சுமார் 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பில் பிலிம் பஜார் எனும் சினிமா சந்தை மூலம் இந்திய திரைப்பட படைப்பாளிகளை உலக படைப்பாளிகளுடன் இணைக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதியாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். விழாவில், அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த வரும் உலக திரைப்பட படைப்பாளிகளுக்கு ஒற்றை சாளர முறையில் படப்பிடிப்பு வசதிகளை செய்து தர அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. இந்த அழைப்பை அன்புடன் விடுக்கிறேன்.

சென்னை திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னையை உலக திரைப்பட விழாக்களின் சந்தையாக தமிழக அரசு மாற்றியுள்ளது. விரைவில், தமிழ்நாடு பிலிம் பெசிலிடேஷன் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிலேயே முன்மாதிரி முயற்சியாக அரசு மூலம் ஆன்லைனில் சினிமா டிக்கெட் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னைக்கு அருகே பையனூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் பிரமாண்ட சினிமா படப்பிடிப்பு தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு எளிதில் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே வளாகத்தில் அனைத்து திரைப்பட கலைஞர்களும் தங்குவதற்கு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் டிஸ்னிலேண்ட்-க்கு இணையாக மிகப்பெரிய திரைப்பட தளம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

சென்னை அரசு திரைப்பட கல்லூரியில் ஏற்கனவே அனிமேஷன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நமது மாணவர்களும் படைப்பாளிகளும் உலக திரைப்பட விழாக்களில் தங்களின் படைப்புகளை கொண்டு சேர்க்க உதவியும் செய்யப்படும். அடுத்த ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்கள், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்க தமிழக அரசு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சர்வதேச திரைப்பட விழாவில், தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, தேசிய திரைப்பட வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் கல்யாணியிடம், அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வந்திருந்த சினிமா படைப்பாளிகளை அவர் சந்தித்து ஊக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல துணை பொதுமேலாளர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், டாக்டர் ரமேஷ், தென்னிந்திய திரைப்பட சம்மேளன செயலாளர் ரவி கோட்டாக்காரா, டைரக்டர்கள் பார்த்திபன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஏ.வி.எம்.சண்முகம், அருண் வைத்தியநாதன், தயாரிப்பாளர்கள் வெங்கட், எம்.எஸ்.மகேஷ், நடிகை அனுபமா, நடிகர் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com