

சென்னை,
மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையிலும், தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக அனுசரிப்பது குறித்து கடந்த 1999ம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலக தாய்மொழி திருநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து கவிதை மொழியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்
மொழி என்பது
ஒலிக்கருவி அல்ல;
உயிரி
ஏன் காக்க வேண்டும்
மொழியை?
அது
காலம்சேமிக்கப்பட்ட
கலம்
மரபு - வரலாறு
மருத்துவம் - பண்பாடு
கலை - இலக்கியம்
விழுமியம் – பெருமிதம்
முதலானவற்றைத்
தலைமுறைகளுக்குக் கடத்தும்
ஆவண வாகனம்
ஒரு மொழி வாழ்வது
அது பேசப்படுவதால்தான்
ஒரு மொழிபேசும்
கடைசி மனிதனின் குழியில்
மொழியும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது
தமிழர்கள்
நிறையப் பிள்ளை பெறுங்கள்
அருள்கூர்ந்து
தாய்மொழியில் பேசுங்கள்;
எழுதுங்கள்
தயவுசெய்து
தாய்மொழியில் திட்டுங்கள்
தனித்தமிழில்
உரையாடுகிறவனை
விசித்திர விலங்காய்ப்
பார்க்காதீர்கள்;
அவன்தான் மொழியின்
கடவுக் கடவுள்
அதிகார மையங்களில்
புழங்காமல்,
அரசியலின் கதகதப்பு
இல்லாமல்,
தாய்மொழி வழிக்கல்வி
தழைக்காமல்,
அறிவியல் கருவிகளை
ஆளாமல்
தழைக்காது தாய்மொழி
ஒவ்வொரு
தேசிய இனத்துக்கும்
இது அச்சடித்த எச்சரிக்கை
தாய்மொழி புழங்குக;
தாய்மொழி வழங்குக;
எவ்வினத்திலும்
தாய்மொழியே விளங்குக"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.