

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளிர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையாவது:-
வீட்டையும், நாட்டையும் தாங்கிக் காக்கும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப் படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
மகளிருக்கு அதிகாரமும், உரிமையும் அளிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட 100 மடங்கு முக்கியமானது பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியதாகும். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு என்றாலே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்பாவி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் தான் நினைவுக்கு வருகிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54%, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 % அதிகரித்திருக்கின்றன. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலையில் அவர்களின் முன்னேற்றம், அதிகாரம் பற்றி சிந்தித்துப் பார்க்கவே முடியாது.
சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டு பெண்கள் படைப்புத்திறன் மிக்கவர்களாகவும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். இப்போது கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்காத உரிமை மற்றும் அதிகாரத்தைப் போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு.
ஆனால், அதற்கு பெரும் தடையாக இருப்பது பெண்கள் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடும் சூழல் இல்லாதது தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதன்மைக் காரணமாக திகழ்வது மது, கஞ்சா உள்ளிட்ட போதைகள் கட்டுப்படுத்தப்படாமல் தலைவிரித்தாடுவது தான். இந்த நிலையை மாற்றி அண்ணா பல்கலைக்கழகம், ஆரம்பாக்கம், கோவை ஆகிய இடங்களில் நிகழ்ந்தது போன்ற கொடிய நிகழ்வுகள் நடக்காத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினால் தான் பெண்களுக்கு எளிதாக அதிகாரமும், உரிமையும் கிடைக்கும். அத்தகைய நிலை ஏற்படும் போது தான் மகளிர் நாளை தமிழ்நாட்டில் மகிழ்ச்சியுடனும், உற்சாகமாகவும் கொண்டாட முடியும்.
தமிழ்நாட்டில் அத்தகைய சூழல் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும்; அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்காக மக்கள் தங்களுக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தையும், விலைமதிப்பற்ற உரிமையையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி மீண்டும் ஒரு முறை மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.