வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது திருமாவளவன் பேட்டி

அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது திருமாவளவன் பேட்டி
Published on

நாமக்கல்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நடந்த வன்முறைக்கு அரசியல் கட்சிகள் மீது பழிபோடுவது அபாண்டமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீனவர் குப்பங்களிலும், தலித் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சு போன்ற செயல்களில் நேரடியாகவே ஈடுபட்டு உள்ளனர். காவல் துறையினரின் திட்டமிட்ட இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து வருகிற 28ந் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மக்கள் நலக்கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் 7 நாட்கள் வரை போராட்டத்தை அனுமதித்தவர்கள் அவசர சட்டம் கொண்டுவந்த ஒரு சில மணி நேரத்திலேயே, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்ற ஆதிக்கத்தை நிலை நாட்டப்பார்த்தது தான் இந்த வன்முறைக்கு காரணம்.

பிப்ரவரி 2ந் தேதி ஆர்ப்பாட்டம்

எனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சமயத்தில் பல்வேறு இடங்களில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சாதிய வன்கொடுமை தாக்குதல்களை கண்டித்து வருகிற பிப்ரவரி மாதம் 2ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரியலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பங்கேற்ற இளைஞர்கள், மாணவர்களில் தி.மு.க., பா.ஜனதா, இடதுசாரிகளை சேர்ந்த ஆதரவாளர்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவர்களால் எந்த வன்முறையும் வெடிக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தால் வன்முறையில் ஈடுபடுவோம் என்பதை போல் காவல் துறையினர் நடந்து கொண்டனர். வன்முறைக்கு அரசியல் கட்சிகள் அல்லது அரசியல் சக்திகள் மீது பழியை போடுவது அபாண்டமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com