கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
கையெழுத்து இயக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதரவு தர வேண்டும்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பவற்றை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்காக பிப்ரவரி 2-ந்தேதி முதல், 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, ஜனாதிபதியிடம் வழங்க இருக்கிறோம்.

இந்த கையெழுத்து இயக்கத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரத்திலும், ஒன்றியங்களில், நகரங்களில், பேரூர்களில், கிளைகளில், ஊராட்சிப் பகுதிகளில், ஒன்றியப் பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று நிறைவேற்றுவதென்று முடிவு செய்துள்ளோம். இதற்குக் கட்சிக்கு அப்பாற்பட்ட, கட்சி சார்பற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள், அத்தனை பேரும் ஆதரவு தரவேண்டும் என்று நான் உங்கள் மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பெரியார் சிலை உடைப்பு

கேள்வி:-பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதே?

பதில்:-தொடர்ந்து இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கண்டிக்கத்தக்கது. உரிய நடவடிக்கை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும்.

கேள்வி:-இதற்கு எதிராக மனிதச்சங்கிலி நடத்தத் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்திருக்கிறார்கள். அதற்கு உங்கள் கூட்டணி ஆதரவு தருமா?.

பதில்:-நிச்சயமாக எங்கள் கூட்டணி அதற்கு ஆதரவு தரும்.

கேள்வி:-ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக நீங்கள் கவர்னரை சந்திப்பீர்களா?

பதில்:-இதை நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சரவையே தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. தற்போது உச்ச நீதிமன்றமே அது எந்த நிலையில் இருக்கிறது எனக் கேள்வி கேட்டிருப்பது மகிழ்ச்சியைத் தரும் செய்தியாக வந்திருக்கிறது. இப்போதாவது இந்த அரசு கவர்னரை வலியுறுத்துமா என்று தான் நான் கேள்வி கேட்கிறேன். நாங்களும் அழுத்தம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சதி திட்டம்

கேள்வி:-நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதே?

பதில்:- இங்கிருக்கும் அரசு ஒரு இரட்டை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல், நீதிமன்றத்திற்குப் போவது போல ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு அடிமை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மத்திய அரசு அதைத் துணிந்து செய்து கொண்டிருக்கிறது.

5-ம் வகுப்புக்கு பொது தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கிப் போய் இருக்கிறது. அதையெல்லாம் மூடி மறைத்து திசை திருப்பத்தான், மத்திய அரசு இந்த சதித் திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com