சட்டவிரோத மது பார்கள் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

கரூரில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களை மூட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டவிரோத மது பார்கள் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
Published on

கரூர் மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டத்தில் 89 டாஸ்மாக் கடைகளுடன் பார் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் 45 கடைகளின் பார்களுக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்டு உள்ளது. மற்றவை சட்டவிரோதமாக செயல்படுகின்றன.

கடந்த ஆண்டில் 44 டாஸ்மாக் கடைகளுடன் பார் நடத்த ஏலம் விடுவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மற்ற 43 டாஸ்மாக் கடைகளிலும் சட்டவிரோதமாக பார்கள் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களை மூடவும், பார்களுக்கான ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் பொதுவாக கூறப்பட்டு உள்ளது. எந்தெந்த டாஸ்மாக் கடைகளுடன் சட்டவிரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன என்ற விவரம் தாக்கல் செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் மனுவை மனுதாரர் அளித்தால் அதனை டாஸ்மாக் நிறுவன செயலாளர், மாவட்ட மேலாளர், கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com