டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு


டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
x

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

சென்னை மணப்பாக்கம் சி.ஆர். புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவக்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

முன்னதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனிடம், சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய விசாரணை நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் மணப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து மீண்டும் விசாகனிடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story