போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் விமானநிலைய ஊழியர்களுக்கு தொடர்பு குறித்து விசாரணை

போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் திடுக்கிடும் தகவல் விமானநிலைய ஊழியர்களுக்கு தொடர்பு குறித்து விசாரணை
Published on

சென்னை,

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடந்த மே மாதம் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த தேனியை சேர்ந்த தேவராஜன் என்பவர் குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். இதையடுத்து விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப் படுத்தியதில், போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய 5 பேர் அடுத்தடுத்து பிடிபட்டனர்.

அவர்களில் சிலர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயங்கி வரும் துருக்கி போன்ற நாடுகளுக்கு சென்றுவந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த தனியார் டிராவல்ஸ் நிறுவனம் போலி பாஸ்போர்ட் சப்ளை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் கடந்த திங்கட்கிழமை மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்ட டிராவல்ஸ் நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் 80 இந்திய போலி பாஸ்போர்ட்களும், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்களும் சிக்கின. இதையடுத்து போலி பாஸ்போர்ட் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். போலி பாஸ்போர்ட் தயாரிக்க பயன்படுத்திய எந்திரங்கள், அச்சு முத்திரைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் பயனற்ற, காலாவதியான பாஸ்போர்ட்களை பெற்று, அதில் இருக்கும் புகைப்படத்தை எடுத்துவிட்டு போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

தற்போது இந்த விவகாரத்தில் விமானநிலைய ஊழியர்கள் உடந்தையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பிவைத்ததாக சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது போலி பாஸ்போர்ட் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஜெயசிங், ஸ்டீபன், மத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் கிரிதரபிரசாத், தற்காலிக ஊழியர் மணிவண்ணன் ஆகிய 4 பேர் சிக்கினர்.

தற்போது சிக்கியுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் இருந்து இலங்கை தமிழர்கள் அதிகளவில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் பெங்களூரு, ஐதராபாத் போன்ற விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு சென்றுவந்துள்ளனர்.

எனவே இந்த விவாகரத்தில் விமான நிலைய ஊழியர்களும் உடந்தையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள போலி பாஸ்போர்ட் கும்பலிடம் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது.

வெளிநாடு சினிமா படப் பிடிப்புகளுக்கு சென்றுவர திரைப்பட துறையினர் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியதாக வெளியான தகவல்கள் தவறானவை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com