திருமண வரன்தேடும் வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி - போலீசார் எச்சரிக்கை

தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன.
திருமண வரன்தேடும் வலைதளங்கள் மூலம் முதலீட்டு மோசடி - போலீசார் எச்சரிக்கை
Published on

சென்னை,

அறிவியல் தொழில்நுட்பங்கள் மக்களின் வளர்ச்சிக்கு கைகொடுத்தாலும், அதை தவறாக பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆன்லைன் மோசடி பல வகைகளிலும் நடந்து வந்தாலும் அதில் புதிதாக திருமண வரன் தேடும் தளங்களை பயன்படுத்தி மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத்தேடும் நபர்களை குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையை பெறுகின்றனர். அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை மோசடியில் சிக்கவைக்கின்றனர்.

இதில், உயர் வருமானம் தரும் போலி முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது, வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பரிசுக்கான சுங்க கட்டணம் செலுத்துமாறு கேட்பது அல்லது ஒரு அவசர நிலைக்காக பணம் கேட்பது போன்றவைகள் அடங்கும்.

சமீபத்தில் திருமண வரன்தேடும் தளங்களைப் பயன்படுத்தி, போலி முதலீட்டு தளங்களில் (www.oxgatens.com, www.oxgatens.net, www.cityindexmain.com, www,cityindexlimited.com) பெருந்தொகையை முதலீடு செய்யவைப்பதில் ஒரு புதிய போக்கு காணப்படுகிறது. இந்த தளங்கள் நம்பகமானவை போல தோற்றமளிக்கும். மேலும், போலி வெற்றிக்கதைகள் மற்றும் தவறான லாபங்களை காட்டும்.

மக்கள் சிறிய தொகையை முதலில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும், ஆரம்பத்தில் சிறிய தொகைக்கான லாபங்களையும் தருகின்றனர். இதனால், நம்பிக்கை ஏற்பட்ட பின்னர், அவர்கள் அதிக தெகையை முதலீடு செய்யும்போது, பணத்தை திரும்பப்பெற முடியாது. மோசடியாளர்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.

தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன.

எனவே, பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும். அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்ததால் எச்சரிக்கையாக இருங்கள். ஆன்லைன் அறிமுகமானவரின் ஆலோசனையின் அடிப்படையில் ஒருபோதும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். குறிப்பாக, குறுகிய காலத்திற்குள் அதிக வருமானம் தருவதாக அவர்கள் உறுதியளித்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.

அந்நியர்களுடன் வாட்ஸ்-அப் அல்லது பிற மெசேஜிங் ஆப்ஸ் மூலம் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைப் பகிர வேண்டாம். நம்பகமான முதலீடுகள் முறையான சேனல்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுககவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் பதிவு செய்யவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com