அடகுகடை இரும்பு பெட்டகத்தை வயல்வெளிக்கு தூக்கி சென்ற கொள்ளையர்கள் சாவகாசமாக உடைத்து 100 பவுன் நகையுடன் தப்பி ஓட்டம்

அடகுக்கடை இரும்பு பெட்டகத்தை வயல்வெளிக்கு தூக்கி சென்று உடைத்து அதில் இருந்த 100 பவுன் நகையை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டார்கள்.
அடகுகடை இரும்பு பெட்டகத்தை வயல்வெளிக்கு தூக்கி சென்ற கொள்ளையர்கள் சாவகாசமாக உடைத்து 100 பவுன் நகையுடன் தப்பி ஓட்டம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி செல்வகுமாரி. இவர் தொழுதூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். எனவே சங்கர் குடும்பத்துடன் தொழுதூரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.

கீழ்கல்பூண்டி கிராமத்தில் சங்கர், நகை அடகுக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்மநபர்கள் நகை அடகுக்கடை பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த இரும்பு பெட்டகத்தை தூக்கிச்சென்றனர்.

இரும்பு பெட்டகத்தை தூக்கி சென்றனர்

இந்த நிலையில் நேற்று காலையில் நகை அடகுக்கடை திறந்து கிடந்ததை கண்டு, அப்பகுதியினர் சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சங்கர் விரைந்து வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு நகைகள் இருந்த இரும்பு பெட்டகத்தை மர்மநபர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது.

இது குறித்த தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து, அடகுக்கடையை பார்வையிட்டனர். மேலும் கடையை சுற்றியுள்ள பகுதியை பார்த்தபோது, 500 மீட்டர் தொலையில் வயல்வெளியில் இரும்பு பெட்டகம் கிடந்தது. உடனே போலீசார், அதனை பார்வையிட்டனர். இரும்பு பெட்டகம் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

100 பவுன் நகை கொள்ளை

நள்ளிரவில் மர்மநபர்கள் அடகுக்கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று, இரும்பு பெட்டகத்தை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் ஏற்பட்டதால், மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த மர்மநபர்கள், அதனை அருகில் உள்ள வயல்வெளிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அங்குவைத்து சாவகாசமாக இரும்பு கம்பியால் பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த 100 பவுன் நகையும், 10 கிலோ வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். அவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அடகு வைத்தவைகள் ஆகும்.

வலைவீச்சு

இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், கொள்ளை நடந்த அடகுக்கடையில் மோப்பமிட்டபடி இரும்பு பெட்டகம் கிடந்த விவசாய நிலம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com