

சென்னை,
நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கடந்த மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளதாகவும்,இந்த முறைகேட்டில் மேலும் இரு பதிப்பகங்களுக்கு தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த புத்தக கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கடந்த 7-ந்தேதி, நான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது இதுவரை எந்தவொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயாணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக டன் கணக்கில் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு, பல அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை மோகனை காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளார்.
இந்த முறைகேட்டில் , சிக்மா மற்றும் வித்யா ஆகிய இரு பதிப்பகங்களுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அகல் விளக்கு பதிப்பகத்துக்கு ரூ.1.74 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் முன்வந்தால், அவர்களுடைய வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும். பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் இதுபோன்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், ஐகோர்ட்டு 2024-ம் ஆண்டு வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், இந்த முறைகேட்டை தவிர்த்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுதொடர்பான உத்தரவு நகலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுதாரர் பரந்தாமனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யப்படும் என்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பு உத்தரவாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி,வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தார்.