

சென்னை,
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களுக்கு புத்தகக் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய டி.ஜி.பி. வெங்கடராமனை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட கோவை காந்திபுரம் 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் போலி புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புத்தகங்கள் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன், நூலகத்தில் தகுதியற்ற மற்றும் தவறான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட புத்தகங்கள் இடம்பெற்றிருப்பதை வெளிக்கொண்டு வந்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் கோவை பெரியார் அறிவு உலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யக் கோரி, திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று (25.11.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது
அப்போது, நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு, “தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளாகப் புத்தகங்கள் கொள்முதல் செய்தது தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை கண்காணிக்க வேண்டும்” என்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனை பரிசீலித்த நீதிபதி, நூலகங்களுக்கு ரூ.1,645 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட பல்வேறு புத்தகங்கள் குப்பை போல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்த புத்தகக் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநருமான வெங்கட்ராமனை நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.
அவர் லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்களை ஆய்வு செய்து, அது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு தனது கருத்துக்களைத் தெரிவிக்கவும் ஐ.பி.எஸ். அதிகாரி வெங்கட்ராமனுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம், ஐ.பி.எஸ். அதிகாரி வெங்கட்ராமனுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
வெங்கட்ராமன் தனது முதற்கட்ட அறிக்கையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, போலி புத்தகங்கள் தொடர்பான வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.