

சென்னை,
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக 17 நியமிக்கப்பட்டனர். இவர்களது நியமன நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்ததால், இதுகுறித்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்தனர் . பின்னர் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- சென்னை ஐகோர்ட்டில் தொழில்நுட்ப உதவியாளர்கள், நூலகர்கள், தட்டச்சர்கள், பதிவாளர்களின் உதவியாளர்களாக பணியாற்றிய 17 பேர் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளின்படி, உரிய தகுதியைப் பெறாத நிலையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உரிய தகுதியைப் பெற 2 ஆண்டுகள் வரை ஐகோர்ட்டு காலஅவகாசம் வழங்கியது சரியானது அல்ல.
குறிப்பாக திறன் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, திறன் தேர்வில் தேர்ச்சி பெற ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதுவும் இந்த தேர்வு நடைமுறைகளில் ஏற்கெனவே ஐகோர்ட்டில் பணியில் உள்ளவர்களை மட்டும் பங்கேற்க அனுமதித்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள பிற தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த செயல் நீதித்துறை நிர்வாகம் மீதான தவறான தகவலை பொதுமக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
பணியில் உள்ளவர்கள் தகுதி பெறவில்லை என்றால், நேரடி தேர்வு நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற விதியை மீறி, விதிகளை தளர்த்தி இந்த 17 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த 17 பேரது நியமனங்களையும் ரத்து செய்கிறோம். இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்கும் வகையில் புதிதாக மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள ஐகோர்ட்டு பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.