ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு

தேனி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் அதிக பணம் பெற்று முறைகேடு நடப்பதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.
ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு
Published on

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி வரவு, செலவுகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் துணைத்தலைவர் பேசும்போது, 'சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கும், அதற்கு ஆதரவு அளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தும், ஜி.20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கும் சிறப்பை இந்தியா பெற்றுள்ளதால் இந்த சிறப்புக்கு காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று தீர்மானங்களை முன்மொழிந்தார்.

முறைகேடு

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, 'தேனி நாடாளுமன்ற தொகுதி, போடி சட்டமன்ற தொகுதி நீண்டகாலமாக பொதுத்தொகுதியாகவே உள்ளது. இதை தனித்தொகுதியாக மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் 14 வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் இக்கூட்டத்தில் துணைத்தலைவர் பேசும்போது, 'மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை. இத்திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க அரசு நிர்ணயித்த பயனாளியின் பங்களிப்பு தொகையை விட பல மடங்கு வசூல் செய்யப்படுகிறது. இதை அதிகாரிகளும் முறையாக கண்காணிப்பது இல்லை. இந்த முறைகேடு தடுக்கப்பட வேண்டும். பங்களிப்பு தொகையை விட கூடுதல் பணம் வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். அதே குற்றச்சாட்டை கவுன்சிலர்கள் சிலரும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com