முதல் நாள் ராஜினாமா; மறுநாள் வாபஸ்! பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் ஏற்படுத்திய பரபரப்பு

பள்ளப்பட்டி நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் முதல்நாள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மறுநாள் அதை வாபஸ் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல் நாள் ராஜினாமா; மறுநாள் வாபஸ்! பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க. கவுன்சிலர் ஏற்படுத்திய பரபரப்பு
Published on

ராஜினாமா கடிதம்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியின் 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக பதவி வகித்து வருபவர் எம்.ஒய். முகமது ஜமால். இவர் தனது வார்டில் மக்களுக்கு தேவையான பணிகளை செய்யவில்லை என்று கூறி நேற்று முன்தினம் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கே.பி.குமரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் நகராட்சி ஆணையரிடம் சென்று ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக கூறி அவர் அதை திருப்பி வாங்கி சென்றார். இது நகராட்சி கவுன்சிலர்கள் வட்டாரத்திலும், தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம் என்ன?

முதல்நாள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு மறுநாள் அதை வாபஸ் பெற்றுக்கொண்டது ஏன் என்று அவரிடம் கேட்டபோது, `எனது வார்டில் சரிவர வேலை நடைபெறவில்லை. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளது. அதனால் எனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தேன். தற்போது எனது வார்டில் தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஆணையர் தெரிவித்ததால் எனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன், என்றார்.

தலைவரிடம் தான் கொடுக்க வேண்டும்

இதுதொடர்பாக பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர் ஜான் கூறுகையில், பள்ளப்பட்டி நகராட்சியை பொறுத்தவரை அனைத்து மக்களுக்கும், அனைத்து வார்டுகளுக்கும், பொதுவாகவே பணிகள் பங்கீடு செய்யப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. வார்டு கவுன்சிலர் முகமது ஜமால் ராஜினாமா கடிதத்தை ஆணையரிடம் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். ராஜினாமா கடிதம் கொடுப்பது என்றால் நகராட்சி தலைவரிடம் தான் கொடுக்க வேண்டும். அந்த வகையில் என்னிடம் யாரும் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை, என்றார்.

அரசு சட்டதிட்டங்களின்படி பணி

பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கே.பி.குமரன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் 15-வது வார்டு கவுன்சிலர் முகமது ஜமால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி எனக்கு ஒரு தபால் கொடுத்திருந்தார். அது முறைப்படி நகராட்சி தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறினேன். நேற்று காலை நகராட்சி தலைவருக்கு அந்த தபாலை வழங்குவதற்கு முன்பாகவே முகமது ஜமால் என்னிடம் வந்து எனது வார்டில் சரிவர வேலை நடைபெறவில்லை என்ற ஆதங்கத்தில் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தேன்.

தற்போது எனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி வாபஸ் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்றுச்சென்றார். பள்ளப்பட்டி நகராட்சியை பொறுத்தவரை அனைத்து வார்டுகளுக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்டு அரசு சட்டதிட்டங்களின்படி பணிகள் நடைபெற்று வருகிறது. வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நகராட்சி தி.மு.க. கவுன்சிலர் முதல்நாள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு மறுநாள் அதை வாபஸ் பெற்ற சம்பவம் பள்ளப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com