தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பயன்பாட்டில் உள்ளதா? - ராமதாஸ் கேள்வி

சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் நவீன முறையில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"முன்பு தமிழக அரசு ஏழை எளிய மக்களும் நல்ல கல்வி முறையை பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% சதவீதம் வரை கல்வி பயின்று பயன் பெறலாம் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்தத் திட்டத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முறைகேடுகள் நடந்திடா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் அந்தந்த பள்ளிகள் அமையப்பெற்ற இடங்களின் அந்தந்தப் பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் 2013 ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுக்கள் என்ன ஆனது? அதனை தற்பொழுது முறைகேடாக தனியார் பள்ளிகள் பயன்படுத்தி வருவதை கண்டு மனம் வேதனை அடைகிறது.
அதோடு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கை கட்டணம் என்ற பெயரிலும், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரிலும் பெற்றோர்களிடம் தேவையற்ற கட்டணங்களை நவீன முறையில் வசூல் செய்து வருகிறார்கள். கட்டணம் வசூல் செய்யும் முறையினை பொறுத்தவரை பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டு முறையினை ஒரு சிறிது அளவு கூட இவர்கள் பின்பற்றவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. அந்த வகையில் சேர்க்கை கட்டணம் என்பது 10,000 ரூபாயில் துவங்கி 25 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது.
அதேபோன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் 25,000 துவங்கி 35 ஆயிரம் வரை வசூல் செய்யப்படுகிறது. பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் இல்லத்திற்குச் செல்ல வேண்டும். அப்படி என்றால் 2 மணி நேரம் கூடுதலாக வகுப்பு நடத்துகிறார்கள். 6 மணி நேரத்தில் நடத்திட முடியாத பாடத்தினை இரண்டு மணி நேரத்தில் என்ன நடத்த போகிறார்கள் இவர்கள். இத்தகைய செயல் என்பது முறைகேடாக கல்வி கட்டணங்களை வசூலிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக தெளிவாகத் தெரிகிறது. எனவே இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.