

சென்னை,
தங்கத்தில் 'ரீனியம்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாக பரவி வருகின்றன.
ஏழை-எளிய வர்க்கத்தினர் முதல் வசதிப்படைத்தவர்கள் வரை அனைவராலும் வாங்கப்படக்கூடிய ஒரு பொருளாக இருக்கும் தங்கத்திலும் கலப்படம் என்ற தகவல் தற்போது காட்டுத்தீயாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, தங்கத்தில் ரீனியம்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ரீனியத்தை தங்கத்தில் கலந்தாலும், கலப்படம் இருப்பதை காட்டும் அதாவது நகையை பரிசோதிக்கும் எந்திரத்தால் கூட கண்டுபிடிக்க முடியாது எனவும், 22 காரட் தங்கம் என்றே காட்டும் எனவும், சீனாவில்தான் இந்த ரீனியம் வேதிப்பொருள் பொடி தயாரிக்கப்படுகிறது என்றும், 100 கிராம் எடை கொண்ட இந்த பொடியின் விலை ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேல் இருக்கலாம் என்றும் அதில் சொல்லப்படுகிறது.
சீனாவில் இருந்து இந்த ரீனியம் பொடி இந்தியாவுக்குள் ஊடுருவுவதாகவும், அப்படிப்பட்ட ரீனியம் பொடி கலந்த தங்கத்தை வாங்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல், ரீனியம் பொடியில் தங்கத்தை உருக்குவதையும், மீண்டும் தங்கமாக வடிவமைத்த பிறகு அது அச்சு அசல் மாறாமல் தங்கமாக ஜொலிப்பதையும் கூட சமூக வலைதள வீடியோவில் காட்டுகின்றனர்.
ஆனால் இதுபற்றி மெட்ராஸ் வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, 'சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முழுக்க முழுக்க பொய். ரீனியம் பொடியை தங்கத்தோடு சேர்க்கவும் முடியாது. இந்தியாவுக்குள் அது வரவும் வராது. ஏ.ஐ. மூலம் ஏதாவது ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். இதற்கு முன்பு தங்கத்துக்கு மாற்று பொருள் பாதரசம் என்று சொன்னார்கள். ஆனால் அது சாத்தியம் ஆனதா?. எனவே தங்கத்துக்கு நிகர் தங்கம்தான்' என்றார்.