மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி

த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன் என கூறியுள்ளார்.
மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கடிதம் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ஆதரவு எங்களுக்கு உள்ளது என கவர்னரிடம், த.வெ.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது.

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜை காணவில்லை. அவர் விலை போய் இருக்கலாம் என்றார். விஜய் பதவி வெறியில் இருக்கிறார். த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் மக்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் மக்கள் மாளிகைக்கு சென்று கவர்னரை நேரில் சந்தித்து பேசினார். இதனால், நள்ளிரவில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

காமராஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அவர்கள் இருவரும் மக்கள் மாளிகைக்கு சென்றனர். காமராஜை காணவில்லை என கவர்னரிடம் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, டி.டி.வி. தினகரன் கூறும்போது, கவர்னரிடம் கொடுத்த கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. அக்கடிதம் போலியானது. காமராஜ் பெயரில் கவர்னருக்கு வாட்ஸ்அப் மூலம் போலி கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என கூறினார்.

உங்களுக்கு 108 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். அறுதி பெரும்பான்மையே இன்னும் இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சியை கொடுக்க போகிறீர்கள். ஆனால், ராவணன் சீதையை தூக்கியதுபோல், ஒரேயொரு கடித நகலை கொடுத்து எங்களுடைய எம்.எல்.ஏ.வை தூக்க பார்த்துள்ளனர். உலகத்திலேயே கேள்விப்படாத வகையில் மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளனர். மோசடி வேலை செய்வதுதான் தூய சக்தியின் வேலையா? என த.வெ.க.வுக்கு எதிராக டி.டி.வி. தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அ.ம.மு.க. ஆதரவு உள்ளது என்று தவறான தகவலை கவர்னரிடம், த.வெ.க. அளித்துள்ளனர். ஆனால், காமராஜ் ஆதரவு தரவில்லை. இதுதொடர்பாக போலீசில் நாங்கள் புகார் அளிப்போம். அந்த கடிதங்களை ஆராய வேண்டும். அதுபற்றி விசாரணை நடத்த கவர்னரிடம் புகார் அளித்துள்ளேன். மீண்டும் புகார் அளிக்க உள்ளேன் என்றார். தி.மு.க.வின் கோட்டையான மன்னார்குடியில், நாங்கள் உழைத்து, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

ஒரேயொரு எம்.எல்.ஏ. எங்களிடம் உள்ளார். அதனால், கட்சி தாவல் தடை சட்டம் செல்லாது என்று இதுபோன்று செயல்படுகிறார்கள் என்றார். மோசடி கடிதம் த.வெ.க.தான் அனுப்பியது என்று குற்றச்சாட்டாக கூறுகிறீர்களா? என நிருபர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அதற்கு, மோசடி கடிதம், யார் ராமசாமி அனுப்பியிருப்பாரா? த.வெ.க.தான் அனுப்பியுள்ளது. த.வெ.க. சார்பில் கவர்னரிடம் வாட்ஸ்அப் மூலம் கடித நகல் கொடுக்கப்பட்டு உள்ளது. உண்மை கடிதம் எங்கே? என கவர்னர் தரப்பில் கேட்கப்பட்டதற்கு, பின்னர் வந்து தருகிறோம் என கூறியுள்ளனர். இதுதொடர்பாக கவர்னர் தரப்பில் இருந்து, எங்களிடம் கேட்கப்பட்டபோது அதிர்ச்சி ஏற்பட்டது என்றார்.

மோசடி சக்திகள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மோசடி கடிதத்திற்கும் காமராஜுக்கும் தொடர்பு இல்லை. த.வெ.க. மோசடியில் ஈடுபட்டு உள்ளது என ஆவேசத்துடன் கூறினார்.

கடிதம் கொடுத்து காமராஜை கைப்பற்றி விடலாம் என நினைத்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தவர்களின் பின்புலம் பற்றி விசாரிக்கும்படி புகார் அளிப்பேன். தமிழகத்தில் குதிரை பேரம் நடக்கிறது என்று கவர்னர் சந்தேகிக்கிறார் என்றார். போலி கடிதம் கொடுத்து மோசடி நடந்திருக்கிறது என்றும் டி.டி.வி. தினகரன் கூறினார். இதேபோன்று எம்.எல்.ஏ. காமராஜும், நான் அ.தி.மு.க.வையே ஆதரிக்கிறேன் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com