

சென்னை,
சென்னை மாநகரம் இன்று வாழத் தகுதியான நகரமாக இருக்கிறதா? அல்லது தினசரி நரக வேதனையை அனுபவிக்கும் முடிவில்லா காத்திருப்புப் பகுதியாக மாறி இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி, ஒட்டுமொத்த மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-
ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில், தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிட வேண்டிய பொன்னான நேரங்கள், இன்று சென்னையின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்களில் கரைந்து கொண்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரி செல்லும் ஒரு மாணவன் தன் அறிவு வளர்ச்சிக்காக எடுத்துச் செல்லும் புத்தகச் சுமையை விட, போக்குவரத்து நெரிசலின் மன உளைச்சல் சுமையையே அதிகமாகச் சுமக்கிறான். ஒரு தொழிலாளி தன் உழைப்பின் வியர்வையைச் சுவாசிப்பதற்கு முன்பாக, வாகனங்கள் கக்கும் நச்சுப் புகையைத்தான் சுவாசிக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.
அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், சிக்னல்களில் மக்களின் உயிரையே பறிக்கும் அச்சத்தில் காத்துக் கிடக்கின்றன. இது வெறும் போக்குவரத்துச் சிக்கல் அல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத் திட்டமிடலின் படுதோல்வி.
கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்திற்குப் பேருந்து நிலையத்தை மாற்றினால், சென்னையின் நெரிசல் குறையும் என்று அரசுத் தரப்பில் தம்பட்டம் அடிக்கப்பட்டது. எங்கே அந்த மாற்றம்? எங்கே போனது மக்களின் நிம்மதி?
ஒருபுறம் முறையான வழிகாட்டுதல்கள் இன்றிக் கிளாம்பாக்கம் திணறுகிறது. மறுபுறம், ஆம்னி பேருந்துகள் இன்னும் கோயம்பேடு பகுதிக்கே வந்து செல்வது போன்ற குளறுபடிகள் தொடர்கின்றன.
நகரம் முழுவதும் ஒரே நேரத்தில் மெகா திட்டங்கள் என்ற பெயரில் மெட்ரோப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், சாலைத் தோண்டல்கள் என, எவ்வித மாற்றுப்பாதைத் திட்டமிடலும் இன்றி மக்களின் பொறுமை தினந்தோறும் சோதிக்கப்படுகிறது.
சென்னை மட்டுமே தமிழ்நாடா? வளர்ச்சிப் பரவலாக்கல் எங்கே? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஏன் இன்னும் சென்னை என்ற ஒரே ஒரு நகரத்தின் தோள்களில் மட்டுமே சுமத்தப்படுகிறது?
புதிய தொழிற்சாலைகள், பன்னாட்டுப் பெருநிறுவன அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள், மெகா முதலீடுகள் என எல்லாமே சென்னையை நோக்கியே இருக்கிறதே, ஏன்?,
ஒவ்வொரு புதிய நிறுவனமும் சென்னையில் திறக்கப்படும் போதும், இன்னும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், இலட்சக்கணக்கான மக்களும் இந்த நகரின் சாலைகளில் தான் வந்திறங்குகிறார்கள். இது உண்மையான வளர்ச்சி அல்ல! ஒரே ஒரு நகரத்தின் மீது ஒட்டுமொத்தச் சுமையையும் ஏற்றி, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், உரிமைகளையும் பறிக்கும் அபாயகரமான வளர்ச்சி முறை.
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் போன்ற பிற முக்கிய நகரங்களில் ஏன் அதே அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படக் கூடாது? வேலைவாய்ப்புகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்கள் ஏன் வாழ்நாள் முழுக்கச் சென்னை என்ற ஒற்றை நகரத்தை நோக்கி ஓடி வர வேண்டும்?
சென்னையின் சாலைகளை அகலப்படுத்துவதால் மட்டும் இங்குள்ள அடிப்படைப் பிரச்சினை தீராது. மாறாக, தமிழகத்தின் வளர்ச்சியின் பாதையை அகலப்படுத்த வேண்டும். சென்னையில் ஆமை வேகத்தில் நடக்கும் மெட்ரோ மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகளை உரிய மாற்றுப்பாதைகளுடன், போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும். சென்னையை மட்டுமே மையமாகக் கொண்டு குவியும் முதலீட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சமச்சீராகப் பரவலாக்கப்பட்ட புதிய வளர்ச்சித் திட்டங்களை, அரசு உடனடியாக உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.