

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வடபழனி சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு தீ விபத்து நடந்து, அதில் 4 பேர் கருகி பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கட்டிடமே விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை இடிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி ஆணையர் ஆஜராகவில்லை. அவர் சார்பில் துணை ஆணையர் ஆஜரானார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இதன்படி, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்தபோது, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நீதிபதிகள் முன்பு ஆஜராகி, ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைப்படித்துப் பார்த்த நீதிபதிகள், சட்டவிரோத கட்டிடங்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வடபழனியில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தையும் ஒரு வருடமாக இடிக்கவில்லை. தற்போது ஐகோர்ட்டு உங்களை (ஆணையரை) ஆஜராக சொன்னபிறகுதான், அவசரம், அவசரமாக இடித்துள்ளர்கள். ஒவ்வொரு விசயத்திற்காகவும் உங்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?. நீங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் விதிமீறல் கட்டிடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக எந்த விவரமும் இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
அதற்கு மாநகராட்சி ஆணையர் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால், வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து, விதிமீறி கட்டிடங்களை கட்டும் நபர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை ஆக்கிரமிப்பில் சிக்கி குப்பைக்காடாக காட்சியளிக்கிறது. சட்டவிரோதக் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனது பொறுப்பை மறந்து தூங்கிக்கொண்டிருக்கிறதா?.
தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் நீதிமன்றம் ஏற்று நடத்த முடியாது. தினமும் 6 முதல் 10 வழக்குகள் மாநகராட்சிக்கு எதிராக தொடரப்படுகிறது. ஒவ்வொரு வழக்கிலும் உங்களை நேரில் ஆஜராகச் சொன்னால் நிலைமை என்ன ஆகும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள், மாநகராட்சி ஆணையரை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற டிசம்பர் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.